வசந்தம்...
சின்ன சின்ன விஷயங்கள்... நிறைய நிறைய வேலைகள்... இங்கும் அங்குமாய் அலைச்சல்... முடிக்க வேண்டிய வேலைகளின் அவசரம் இவைதான் இந்த பதிவின் தாமதத்திற்கு காரணம்... எவ்வளவோ முயன்றும் என் நேரத்தை திருட முடியவில்லை... இன்றைக்கு திருடிவிட்டேன்... சாப்பிடும் முன் எப்படியாவது எழுதிவிடுவது என்ற முடிவுடன் எழுத உட்கார்ந்து விட்டேன். எழுத நினைத்தது... இதுவரை நம் முன்னோர்கள் அனுபவித்து... ஆனால் நாம் இப்போது அனுபவித்திராத ஒரு விஷயத்தைப் பற்றி...
எந்த வகுப்பில் படித்த பாடம் என்று சரியாக நினைவில்லை. மூன்று அல்லது நான்காம் வகுப்பென்று நினைக்கிறேன். புவியியல் பாடத்தில், பருவங்கள் நான்கு அவை முறையே கோடை காலம், இலையுதிர்காலம், குளிர்காலம், வசந்தகாலம் என்று படித்த ஞாபகம். இதில் ஒவ்வொரு பருவமும் மாறி மாறி வருவது இயற்கை. ஆனால் நம் ஊரில் முதல் மூன்று பருவங்களை மட்டுமே அனுபவித்திருக்கிறேன்.
வசந்தம் என்று கேள்விப்பட்டிருந்தேனே தவிர ஒரு தடவை கூட அனுபவித்ததில்லை. இலையுதிர் காலம் கூட ஒரு சில நேரங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். மொத்த வருடத்தில் கோடையை மட்டுமே அதிகமாக அனுபவித்தாக நினைவு.
ஆனால் இப்போது அதை கண்முன்னால் பார்த்து உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இருக்கும் இடம் மட்டுமே வேறு. அதற்காக நான் பிறந்த இடத்தைப் பழிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம்... எங்கு போனாலும் பிறந்த வீடுதான் சொர்க்கம் என்று நினைப்பவன் நான்...
சரி விசயத்திற்கு வருகிறேன். இப்போது இங்கே குளிர்காலம் முடிந்து, வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது... குளிர்காலத்தில் இறந்துபோன செடிகளுக்கும்,மரங்களுக்கும் மறுபடியும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது இயற்கை. வசந்தம் என்பது செடிகளுக்கும் மரங்களுக்கும் மட்டும் மறு ஜென்மம் அல்ல, அதை பார்க்க கொடுத்து வைத்த நமக்கும்தான்....
முதன் முதலில் அரும்பும் மொட்டும், தளிரிலையும், திடீரென ஒருநாள் மொத்தமும் சில்லென்று பூத்து நிற்பதை பார்க்கும் பொழுது... சிறுவயதில் முதன்முதலில், ரயிலும், ஏரோபிளேனும் பார்க்கும் பொழுது மனசில் ஒரு மகிழ்ச்சி வந்து அப்பிக்கொள்ளுமே... அது மாதிரி சந்தோசம் பொங்கும்...
எனக்கு இயற்கையை ரசிப்பதில் அலாதிப்பிரியம்... இந்த ஒரு அழகை அங்கே இருந்த போது அனுபவித்ததில்லை... ஏன்...? ஒவ்வொரு முறையும் ஊட்டியில் மலர்த்திருவிழா எனும் போதுதான்... அங்கே வசந்தத்தில் வாசல் திறந்திருக்கிறது என்பது ஞாபகம் வரும்...
அதுவும் வசந்தம் தொடங்கும் நேரத்தில், யாரோ சொல்லி வைத்தது போல வானம் அவ்வப்போது பூத்தூவல் போடும்... இயற்கை இறந்து போன தாவரங்களுக்கு உயிரூட்ட யாரோ செய்த செயல்... கடவுளா... இயற்கையா...
இந்த சுகம் நமக்கு அங்கே மறுக்கப்பட்டது எதனால்..._ மன்னர் காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன்... ஆனால் இன்று பருவமழை கூட தாமதமாக வருகிறது... புயலடித்தால்தான் மழை என்றாகிவிட்டது...
மனிதனின் அத்யாவிசிய தேவையான உணவு, நீர், காற்று அனைத்துக்கும் தட்டுப்பாடு... குடிக்கும் நீர்கூட வியாபாரமாகிவிட்டது...
இதற்கெல்லாம் காரணம் யார்...?? அவர் எங்கிருக்கிறார் என்பதே என் கேள்வி...
இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாகிவிட்டது மனிதனுக்கு... எல்லாம் விரைவில் கிடைக்க வேண்டும்... எல்லாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்க வேண்டும்...
சாப்பிடுகிற சாப்பாட்டில் இருந்து வாழ்க்கை வரை எல்லாமே அவசரமே... அவசரம் அவசரமாக பிறந்து, அவசர கதியில் படித்து, அவசரம் அவசரமாய் காதலித்து அல்லது கல்யாணம் பண்ணி அவசரம் அவசரமாய் குழந்தை பெற்று.... அவசரம் அவசரமாய் எல்லாம் முடித்து... அதனால்தான் மரணமும் அவசரமாய் அணைத்துக் கொள்கிறது...
குடிக்கும் நீரிலிருந்து,காற்று, உடை அனைத்திலும் கலப்படம்... ஆனால் அங்கிருந்து இங்கு ஏற்றுமதி பண்ணப்படும் விசயங்கள் அப்படி இல்லை. ஏன்_ நாம் கொடுக்கும் காசு செல்லாக் காசா...? அல்லது இவர்கள் தங்கக்காசு கொடுத்து வாங்குகிறார்களா...?
இங்கே கலப்படும் பண்ணப்படும் விசயங்கள் சந்தைக்கு வரமுடியாது... சட்டமும் மிக கடினமாக இருக்கிறது, மக்களும் விழிப்படைந்து விட்டார்கள்... நாம் இன்னும் இலவச கலாச்சாரத்திலும், கலப்பட கலாச்சாரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன்...??
இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால்... நமது சந்ததிகளுக்காவது நல்ல வாழ்க்கை கிடைக்கும்...