அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Tuesday, February 28, 2006

முகமூடித் திருவிழா...




என் இந்தப்பதிவிற்கான தாமதம், அனுபவத்தின் பதிவுகளை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம்தான். நேற்றுதான் அந்த குழப்பத்திற்கு விடிவு கிடைத்தது என் மனைவியிடம் இருந்து... என் மனைவிக்கும் எழுதுவதில் ஆர்வம் அதிகம்... கூடிய விரைவில் அவரும் அவரது அனுபவங்களை பதிவு செய்வார்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். அவர் எழுதச் சொன்னது நேற்று Freiburg-ல் நடந்த Rosenmontag(carnival Monday) திருவிழா பற்றி. எனக்கும் அதை பற்றி எழுதலாம் என்று தோன்றியது. காரணம் அந்நிய தேசத்தில் நடக்கும் ஒரு திருவிழாவை பற்றி நம் மக்களுக்கு சொன்ன மாதிரி இருக்கும். என்னதான் நாம் திருவிழா கொண்டாடினாலும் அடுத்த நாட்டின் திருவிழாவைப்பற்றி தெரிந்து கொண்ட மாதிரி இருக்கும் என்ற நோக்கத்தில்தான் இதை எழுதுகிறேன்.

இந்த திருவிழா மற்ற திருவிழாக்களைவிட கொஞ்சம் வித்யாசமானது. சிறியவர் முதல் பெரியவர் வரை வித்யாசமான உடை மற்றும் முகமூடி அணிந்து கொண்டு நகரத்தின் முக்கிய வீதியில் உலா வருவார்கள். மதியம் 1.00 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி வரை குழுக்களாக வருவார்கள். பக்கத்தில் உள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து வரும் மக்கள் அந்த நகரம் மற்றும் கிராமத்தின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் விதமாக ஒப்பனை செய்து கொண்டு குழுக்களாக ஆட்டம் பாட்டமாக வருவது கண்கொள்ளாக் காட்சியாக் இருக்கும். மக்கள் மட்டும் அல்ல... சில இசை குழுக்களும் இதில் பங்கு கொள்வார்கள். நம்மை அறியாமலே நாம் ஆட்டம் ஆடும் அளவுக்கு இருக்கும் அந்த இசை இருக்கும்.

1.00 மணி அளவில் நகரத்தின் குதிரைப்படை வரவேற்போடு ஆரம்பிக்கும் இந்தத் திருவிழா போகப்போக சூடு பிடிக்கும். அதே சமயத்தில் போகப் போக குளிர் அதிகரிக்கும். பிப்பிரவரி மாதம் ஆதலால் பகல் நேரத்திலேயே வெப்பநிலை 2 லிருந்து 5 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அதுவும் நேற்றைக்கு கொஞ்சம் சூரியன் கருணை பொங்க பிரகாசித்ததால்தான். ஆனால் அதையும் பொருட்படுத்தாது மக்கள் தெருக்களில் நின்று திருவிழாவை கண்டு களித்தார்கள். இதில் முக்கியமான விசயம், வேஷம் கட்டிக்கொண்டு போகும் மக்கள் "நரி" என்று கத்த சுற்றி நின்று வேடிக்கை பார்பவர்கள் "நரோ" என்று ஒரே குரலில் கத்துவது கேட்பதற்கு தாளலயத்தோடு இருக்கும்.

நாங்கள் பார்த்த காட்சிகளில் இருந்து உங்களுக்காக சில புகைப்படங்களை இங்கே இணைக்கிறோம்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன். கூடிய விரைவில் நாங்கள் சென்ற இடங்கள், அப்போது நாங்கள் சந்தித்த மனிதர்கள் கிடைத்த அனுபவங்களைப்பற்றியும் எழுதப்போகிறேன்.


அன்புடன்,
மனசு...

Saturday, February 11, 2006

முதல் அனுபவம்.....

நீங்கள் என்றாவது உங்களின் முதல் அனுபவம் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா...? அந்த முதல் அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தில் நாம் கற்றுக் கொண்டது என்ன... கற்றுக் கொள்ள மறந்தது என்ன... இதற்கான விடையினை தேடி இதோ ஒரு பயணம்...

என் முதல் பதிப்பிற்க்கும் இரண்டாம் பதிப்பிற்கும் இடைவெளிக்கான காரணம், நான் என் முதல் அனுபவத்தைப்பற்றி எனக்குள் நான் செய்த பயணம்தான்... இது என்னுடைய முதல் அனுபவம் மட்டும் அல்ல... இந்த மனித சமுதாயத்தின் முதல் பயணம்... ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்பயணம்... ஆனால் எத்தனை பேர் இந்தப் பயணத்திலிருந்து கற்றுக் கொண்டோம்...

நான் சொல்வது புரியவில்லையா... நாம் கருவாய் உருவானதைத்தான் சொல்கிறேன்... ஆயிரம் ஆயிரம் அண்ணன்களுடனும், அக்காக்களுடனும் போட்டி போட்டு வென்றோமே... ஒரு செல் உயிராய் நாம் இருந்தபோது நமக்குள் இருந்த வேகம்... இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது... ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஓடி ஜெயிப்பதற்கே மூச்சு முட்டிப்போகும் மனது...
ஒரு சில அடிகள் விழுந்தாலே ஒடிந்து போகும் மனது... இதற்கெல்லாம் காரணம் நாம் நம் பழைய அனுபவத்தை மறந்து போனதே....

நம் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்க... இதோ இந்தப் பயணம்...

உங்கள் அனுபவங்களை இங்கே பதிவு செய்யுங்கள்!!!

அன்புடன்,
மனசு...

Thursday, February 09, 2006

ஒரு புதிய பயணம்....

அனுபவம்...
ஒருவர் தன் வாழ்க்கையில் தான் செய்த செயல்களில் இருந்து கற்று கொள்கிற பாடம். பலர் தான் செய்த தவறுகளிலிருநது கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலர், பிறர் செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்....

தன் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்பவன் புத்திசாலி.... ஆனால் பிறர் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்பவன் அதி புத்திசாலி என்று திரு.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்டு இத் தளத்தில் என் அனுபவங்களை பதிவு செய்ய போகிறேன்... உங்கள் அனுபவங்கள் இன்னொருவருக்கு உதவும் என்று நினைத்தீர்கள் என்றால்.... இங்கே பதிவு செய்யுங்கள்...

நம் அனுபவங்கள் நம் நண்பர்களுக்கு உதவட்டும்.....

அன்புடன்,
மனசு...