அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Tuesday, June 27, 2006

paris-ஸம்மா paris-சு


கிட்டதட்ட ஒரு மாத இடைவெளி... அதிகம்தான். அதிக வேலைச்சுமை காரணமாக எழுதமுடியவில்லை. சரி விசயத்துக்கு வருகிறேன். இந்த ஒரு மாத இடைவெளியில் பாரீசுக்கு இரண்டாம் முறையாக போய்வந்தேன். என் முதல் பயணம் டிசம்பர் 2002ல். கிட்டதட்ட மூன்று வருடங்களில் பாரீஸ் நிறைய மாறி இருக்கிறது.

உலகின் நாகரீக நகரம் என்ற பெயர், பிரமாண்டம், உலக அதிசயத்தில் ஒரு அதிசயத்தைத் கொண்டிருக்கும் நகரம்,புகழ் பெற்ற டி-லரே (De Louvre) மியூசியம் உலக மக்கள்அனைவரும் சுற்றிப் பார்க்க ஆசைப்படும் நகரம், என்று ஏராளமான விசயங்களைச் சொல்ல முடியும். வாழ்நாளில் பாரீசுக்கு ஒருமுறை சென்று வரவேண்டும் ஆசை இருக்கும் மனிதர்கள் ஏராளம்.. மேலை நாடு என்பதால் சுத்தம் சுகாதாரம் என்று கணக்குப்போடும் ஆட்கள் அதிகம்... நீங்களும் அப்படிப்பட்ட ஆட்களில் ஒருவராக இருந்தால்...ஸாரி பாரீஸ் பற்றிய எண்ணங்களை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்... :-)

நான் சென்ற முறை பார்த்ததற்க்கும் இந்த முறை பார்த்ததற்க்கும் நிறைய வித்யாசம் என்று சொல்லியிருந்தேன். என்ன வித்யாசம் என்று கேட்கிறீர்களா ... ?

இதுதான் வித்யாசம்... போனமுறை நான் சென்றபோது கொஞ்சம் சுத்தமாய்( அப்போதே சுத்தமில்லை என்பது வேறு விசயம்) இருந்த பாரீஸ் இப்போது கிட்டத்தட்ட குப்பை மேடாக காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் குப்பை... பேருந்து நிறுத்தம், பாதாள ரயிலுக்காக இருக்கும் வழிகளில் எங்கு பார்த்தாலும் குப்பை, புகழ் பெற்ற இடங்களான Sacre-coeur எல்லாம் அநியாத்திற்க்கு பாழடிக்கப்பட்டிருக்கிறது. நான் முன்பு பார்த்த பாரீஸா இது என்ற எண்ணம் கூட வந்துவிட்டது...

இதைவிட பெரிய கூத்து என்னவென்றால், மக்கள் அவசரத்திற்க்காக வைக்கப்படும் கழிவறைகள் மாலை 6 மணிக்கு இழுத்து மூடப்படுவதுதான். மக்கள் அதிகமாகக் கூடும் Eiffel Tower அருகில் இருப்பது ஒரே ஒரு கழிவறை அது மட்டும் என்ன விதி விலக்கோ தெரியவில்லை வேலை நேரம் காலை 9 முதல் மாலை 7 வரை என்று போடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக நாங்கள் அங்கே போன போது மூடப்பட்டிருந்தது. Eiffel Tower -ன் 2ம் அடுக்கில் ஒரு கழிவறை இருக்கிறது. அன்று வேலை நேரம் முடிந்ததால் அதுவும் மூடப்பட்டு இருந்த்து. அன்று நாங்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே அந்தோ பரிதாபம்!!!

இதை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது... அதனால் தான் அதை சுற்றியுள்ள இடங்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் முன்பு சென்றபோது Eiffel Tower-ன் முன் பக்கம் உள்ள புல்வெளி( அதாங்க அதிசயம் பாட்டுல ஐஸ்வர்யா ராய் ஆடுவாங்களே அதே இடம்தான் ) திறந்த நிலையில் அழகாக இருந்தது. இப்போது வேலிகள் போடப்பட்டு அதன் அழகையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு இடத்திலும் சுகாதாரக்கேடு, குப்பை மேடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் Sacre-coeur-ல் கீழிருந்து மேலே போகும் போது படிகளில் நாங்கள் மூக்கை பிடித்துகொண்டே போனதை இன்னும் மறக்கவே முடியவில்லை.

நாங்கள் எங்கள் இடத்திலிருந்து கிளம்பும் முன் வெப்பநிலை 20 டிகிரியை தாண்டியதில்லை. அதையே நினைத்துக்கொண்டு பாரீஸ் போன் எங்களுக்கு மகா இடி. கிட்டதட்ட 38டிகிரி. 4 நாட்களில் தண்ணீருக்காக நாங்கள் அலைந்த அலைச்சல் இருக்கிறதே. ஒன்றுமட்டும் தெரிகிறது பாரீஸில் தண்ணீர் வியாபாரம் பார்த்தால் பணக்காரனாகிவிடலாம். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதால் கிடைத்த வரை ஆதாயம் என்று ஒரு 500 மிலி பாட்டிலை 2.50 யூரோவிற்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் கடைகளில். சூப்பர் மார்கெட்டுகளில் 1.50 லி தண்ணீர் பாட்டிலின் விலை 85 யூரோ செண்ட். சரியான பட்டிக்காட்டில் வந்து மாட்டிக்கிடோம்டா என்ற நினைப்புதான் வந்தது. இருந்தாலும் தாகத்திற்கு வேறு வழி இல்லை. கிட்டதட்ட தண்ணீருக்கென்று நாங்கள் செலவழித்தது 4 நாட்களில் 25 யூரோ.

ஒன்று மட்டும் தெரிகிறது. பாரீஸ் அரசாங்கம் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறதே தவிர, சுற்றுலா இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஐரோப்பாவின் மற்ற நகரங்களை ஒப்பிடுவதில் ஐந்தில் ஒரு பங்கு கூட அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது. இதே பாரீஸை மூன்று வருடங்களுக்கு முன் பார்த்த போது கொஞ்சமாவது நன்றாகத் தெரிந்தது. இப்போது படு மோசம். இதை ஒப்பிடுகையில் மற்ற இடங்களான இத்தாலியில் உள்ள ப்ளோரன்ஸ், ரோம், பைசா,வெனீஸ் நகரங்கள் மிகவும் நாங்கள் முன்பு பார்த்ததை விட சமீப காலத்தில் சென்றபோது மிகவும் நன்றாக இருந்தது. அங்கும் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் பாரமரிப்பில் எந்தக்குறையும் இல்லை.


இதைவிட மகத்தான் ஒரு காரியம் ஒவ்வொரு பாதாள ரயில் நிறுத்தங்களின் வாசல்களில் மால்பரோ என்ற பெயரில் பகலிலேயே போதைப்பொருள் விற்க்கப்படுவதுதான். இதை என்னவென்று சொல்வது. ம்ம்ம்ம்ம்....

பார்க்கலாம்.... பாரீஸ் முன்னேருமா இல்லை பின்னேருமா என்பது போகப் போகத் தெரியும்...

இந்த முறை பாரீஸ் போனதில் ஒரே ஒரு ஆறுதல், பத்மஸ்ரீ. கமல்ஹாசன் அவர்களை டி லரே மியூசியத்துக்குள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... அவரிடம் கொஞ்சநேரம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது... அது மட்டுமே ஆறுதல்...

அன்புடன்,
மனசு...