எல்லைகள்...
என் முந்தைய பதிவிற்கும் இந்த பதிவிற்குமான இடைவெளி தவிர்க்கமுடியாமல் ஏற்ப்பட்டு விட்டது. நேரமின்மை என்று சொல்லி தப்பிக்க விரும்பவில்லை என்றாலும் அதுவும் ஒரு காரணமே... இனி வரும் பதிவுகளில் அதிக இடைவெளி ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்.
சரி விசயத்துக்கு வருகிறேன். சென்றவாரம் நண்பர்களுடன் அருகில் இருந்த பிரைசாக்(Breisach) என்ற கிராமத்துக்கு சென்று வந்தேன். அதன் சிறப்பு அது ஜெர்மனி, பிரான்சு எல்லையில் அமைந்துள்ளது என்பதே. எத்தனையோ தடவை இதற்கு முன்னால் அங்கே நான் சென்றிருந்தாலும் இந்தமுறை சென்ற பொழுது வித்யசமான எண்ணம் தோன்றியது.
என்ன தெரியுமா... இந்த இரு நாடுகளின் எல்லையை இணைக்கிறது ஒரு ஆறு. ரைன்(Rhein) என்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆறு கிட்டதட்ட ஏழு நாடுகளை!!!(கவனிக்கவும்) தாண்டி ஓடுகிறது. அதன் படம் தான் நீங்கள் மேலே பார்ப்பது. அந்த ஆற்றின் மேல் உள்ள பாலம் வழியாகத்தான் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் மட்டும் அல்லாமல் இரு கிராம மக்களும் வார இறுதியில் ஆற்றின் கரையோரம் தங்கள் பொழுதைக் கழிப்பதை பார்க்கும் போது.... நம்ம ஊரில் ஆறு இருந்தும் அதில் தண்ணீர் இருந்தும்,தண்ணீர் தர மறுக்கும் இதயம் காய்ந்து போன வரட்டு அரசியல் வாதிகளை நினைத்தால் உள்ளம் பதறுகிறது. இங்கே பல நாடுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு ஆறு. அங்கே நாட்டுகுள்ளேயே ஆற்றுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது இரத்த ஆறு!!!
ஒரே நாட்டுக்குள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கே தன்போக்கில் போகும் ஆற்றை அணை போட்டு தடுத்து வைத்திருக்கிறோமே!!! எவ்வளவு பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறோம்... எவ்வளவு பேர் உயிரை பறித்திருக்கிறோம். எல்லையில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஆற்றை அணை போட்டு அரசியல் சாயம் பூசி ஆதாயம் பார்த்துக் கொண்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமே. குடிப்பதற்கு பிஸ்லரியும் சாப்பிடுவதற்கு பாசுமதியும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை இவர்களின் கொட்டம் அடங்காது...
நாடு முழுவதும் உள்ள ஆறுகளை இணைக்கிறோம் என்ற பேச்சு(க்கான) வார்தை எப்போது செயல்வடிவாகுமோ தெரியவில்லை!!! ஆறுகளை இணைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... அவற்றுக்கு செயற்க்கையாக பாதை போட்டு இணைப்பதற்கு முன்னால் தானே பாதை போட்டுக் கொண்ட ஆறுகளை அணை போட்டு தடுக்காமல் இருப்பது நல்லது.
அரசியல்வாதிகள் சுற்றுலா போகிறேன் பேர்வழி என்று வந்துவிட்டு இடங்களை சுற்றிபார்த்துவிட்டு போகிறார்களே ஒழிய இந்த மாதிரி விசயங்களை ஏனோ கவனிப்பதில்லை!!!
வைரமுத்து தன் வைரவரிகளில் சொன்னமாதிரி....
பனிக்குடம் உடைத்து பிறக்கிறோம்...
நீர்க்குடம் உடைத்து முடிக்கிறோம்...
ஆனால் இந்த இரண்டுக்கும் இடையில் அடுத்தவர் மண்டையை உடைக்கிறோம்...
இயற்கை மட்டுமே இந்த அராஜகத்திற்கு பதில் சொல்லமுடியும்... அளவில்லா மழை பொழிந்து அணை நிரம்பிரம்பினால் மட்டுமே இங்கே தண்ணீர் கிடைக்கிறது....
நல்லவேளை பாரதி இன்று இல்லை....
இருந்திருந்தால் அவர் இப்படித்தான் பாடியிருப்பார்....
என்று தணியும் எங்கள் காவிரி தாகம்....!!!
என்று மடியும் எங்கள் உழவரின் உயிர் தியாகம்!!!
அன்புடன்,
மனசு...
எல்லையில்லா வானத்தில் கூட எல்லை போட்டவன் மனிதன்.... பூமியில் இருக்கும் இந்த ஆறுகள் எம்மாத்திரம்...???
Rhein-ன் சில புகைப்படங்கள்