அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Monday, May 29, 2006

உடலை கொஞ்சம் கவனி!!!


எங்க வீட்டு பின்னால ஒரு குளம் இருக்குங்க...அங்க குளிர்காலமா இருந்தாலும் சரி, வெயில் காலமா இருந்தாலும் சரி சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயசு வித்யாசம் இல்லாம எல்லாரும் ஓடிட்டு இருப்பாங்க. நல்ல உடற்பயிற்சி. காலை, மதியம்,சாயங்காலம் ஏன் இராத்திரி 11 மணிக்கு வரை கூட ஆளுங்கள பார்க்கலாம். இங்க வெயில் காலத்தில இருட்டுறதுக்கு நேரம் ஆகிடும். 10.30 வரைக்கும் சூரியன் இருக்கறதால வசதி. மதுரைல கீழவாசல் மாதிரி ஒரு நெருக்கடியான இடத்தில வாழ்ந்த எனக்கு இப்படி காற்றோட்டமான சூழல் ரெம்ப புதுசு. அதிலும் இந்த ஊரு மக்கள் ஆர்வமா ஒவ்வொருத்தரும் உடற்பயிற்சிய ஏதோ தனி ஒரு விசயம்னு நினைக்காம வாழ்க்கையில ஒரு பகுதியாகவே வச்சுருக்காங்க. சின்ன வயசுல இருந்து வெயில் காலம்னா நீச்சல், மலை ஏற்றம், குளிர் காலம்னா பனிச்சருக்குனு ஏதாவது ஒரு வகைல உடற்பயிற்சி பண்றாங்க. இந்த மக்கள்கிட்ட ஆரோக்கியம் பத்தின் விழிப்புணர்வு பற்றி கண்டிப்பா எழுதனும்னு தோனிச்சு. அதான் நான் இந்த விசயத்த பதிவு பண்றேன்.

இந்த இடத்துல நான் ஒரு விசயத்த ரெம்ப அழுத்தமா சொல்லனும். உடற்பயிற்சியை எங்க அம்மா வாழ்க்கைல பண்ணிருந்தாங்கன்னா இன்னிக்கு அவங்க சர்க்கரை வியாதியால அவதிப்பட்டிருக்க மாட்டாங்க. கொஞ்சமாவது அதன் தாக்கத்தில இருந்து தப்பிச்சிருக்கலாம். இன்னிக்கு பல பெண்களுக்கு உடற்பயிற்சியோட முக்கியத்துவத்தை தெரியப்படுத்தனும்கற நோக்கத்தோடதான் இந்த பதிவ போடறேன்.

உடற்பயிற்சினா ஏதோ கல்லு தூக்குறது, கற்லா கட்டை சுத்துறதுதான் நினைக்காதிங்க. நடக்குறது கூட ரெம்ப நல்ல உடற்பயிற்சிதான். நடக்குறதுன்ன சும்மா ஆமை மாதிரி இல்லிங்க. கொஞ்சம் கை கால் வீசி வேர்க்க விறுவிறுக்க நடக்கனும். ஆனா நம்ம பொண்ணுங்களுக்கு அது கூட ஒரு பெரிய சுமை. கொஞ்சம் வேகமா நடங்கப்பானு சொன்னா அவங்களுக்கு ஏதோ வேப்பங்காய் சாப்பிடுற மாதிரி. மூஞ்சி போற போக்கே வேற மாதிரி இருக்கும். இதோட சிலர் சொல்ற சால்ஜாப்பு இருக்கே, அய்யோ எனக்க நேரமே இல்லப்பானு சொல்லுவாங்க, ஏதோ கடவுள் இவங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமா 20 மணி நேரமும் மத்தவுங்களுக்கு எல்லாம் 24 மணி நேரமும் கொடுத்தா மாதிரி. ஆனா காலைல இழுத்துப் போத்திட்டு தூங்குறதுல இவங்க பெரிய ஆளுங்க(பசங்க கூடத்தான்!).

இத விட இன்னொரு பெரிய கொடுமை வீட்டுக்குள்ள... காலைல 11 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 11 மணி வரைக்கும் நேரத்த வீணடிக்கிற விசயம் தொலைக்காட்சி தொடர்கள்... அதுக்கு முன்னால உக்காந்துக்கிட்டு உச் உச்னு உச்சு கொட்டுவாங்களே தவிர... எழுந்து ஒரு நடை காத்தாட, காலாற வெளில போயிட்டு வர மாட்டாங்க. காலைல இருந்து டி.வி முன்னால இவங்களால நேரத்தை வீண்டிக்க முடிகிறதே தவிர தன் உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு 1 மணி நேரம் செலவிட முடிய மாட்டேன்கிறாங்கப்பா. இங்க குழந்தை பெற்றதுக்கப்புறமும் உடற்பயிற்சி பண்றாங்க. தன் உடலை ஆரோக்கியமா வச்சுகிடறாங்க. நம்ம பெண்கள்கிட்ட ஏன் இந்த மனப்பாண்மை இல்லை? இங்க இருக்கிற மத்த விசயமெல்லாம் கத்துகிட்டு தப்பு தப்பா பண்ண முடிகிற நம்மால ஏன் நல்ல விசயத்த கிரகிச்சு கிட முடியல ?

யோகா வோட பிறப்பிடம் இந்தியா. ஆனா இங்க ரெம்ப பிரபலம்க. அதோட அத கத்துகிடறதுக்கும் இங்க நல்ல வரவேற்பு, ஆனா நம்ம ஊருல அத மதிக்கிறதே கிடையாது.. அதுதான் பெரிய வருத்தம். இன்னொரு விசயம் என்னனா, பிரசவத்துக்கு முதல் நாள் வரைக்கும் கூட யோகா பண்றாங்க அதுக்குனு தனியா பயிற்சி இருக்கு. நம்ம ஊருல கரு உருவான உடனேயே அதை செய்யாத இத செய்யாதேனு சொல்லி அவங்கள சீக்காளி மாதிரி ஆக்கி ஒன்னுமே செய்ய விடறதில்ல. கிட்டதட்ட "பெட் ரெஸ்ட்" எடுக்க சொல்லிருவாங்க. ஆனா இங்க, நீச்சல், சைக்கிளிங் எல்லாம் போறாங்க. இங்க மருத்துவர்கள் கூறும் அறிவுரை, "குழந்தை இயற்கைக்கு மாறுபாடாக உருவாகி இருந்தால் அதனால் கருப்பையில் தங்க முடியாது என்பதே."

இங்க இருக்க டாக்டர்ஸ் நீங்க நோயாளி இல்ல, நீங்க ஆடலாம் பாடலாம்னு கருத்தரிச்சவங்க கிட்ட சொல்றப்போ அவங்களுக்கு மனசலவில தைரியம் கிடைக்கிது. இங்க பிறக்கிற குழந்தைங்கள்ள 100 க்கு 99 சதவீதம் இயற்கையான் முறைல குழந்தை பிறக்குது. அறுவை சிகிச்சை அப்படிங்கதே அபூர்வம். அதுமட்டும் இல்லிங்க 30,40 வயசுல கூட குழந்தை பெத்துகிடறாங்க.


ஆரோக்கியமான அளவான உணவு, போதுமான உடற்பயிற்சி, சுத்தமான சுற்றுப்புறம்னு இருக்கிற இடத்தையே சொர்க்கமா மாற்றி வாழறாங்க.

நம்ம இன்னும் உண்வு பொருள்ல கலப்படம்,சோம்பேறித்தனம், சுற்றுப்புறத்த சுத்தமா வைச்சுகிடாம அசிங்கப்படுத்துறது, இந்த மாதிரி விசயத்தால இருகிற இடத்தையே நரகமாகிட்டு இருக்கிறோம்.

இன்னொரு முக்கியமான விசயம். இன்னிக்கு நிறைய பெண்களுக்கு பிரசவத்தில சிக்கல். என்னனு கேக்குறிங்களா. குழந்தை வயித்துக்குள்ள பத்திரமா இருக்கறதுக்காக கடவுள் வச்ச தண்ணீர்குடம் வத்திப்போயி நிறைய குழந்தைகள் இறந்தே பிறக்கிதுங்க. எனக்கு தெரிஞ்சவங்க ரெண்டு பேருக்கு இப்படி ஆகிடுச்சு. இதெல்லாம், நம்ம ஆரோக்கியத்துல நம்மலே அக்கரை இல்லாம இருக்கிறதுதான் காரணம். இனிமேலாவது கொஞ்சம் திருந்தலாம். சும்மா டிவி சினிமா மோகத்தில கண்ட விசயங்கள பாத்து கெடறோம். ஆனா நம்மளுக்கு முக்கியமான விசயங்கள கோட்டை விட்டுடறோம்.

இந்த பதிவ இத்தோட முடிச்சுக்கிறேன். அடுத்த பதிவுல இதப்பத்தி இன்னும் பேசலாம்.

அன்புடன்,
மனசின் மனசு... :-)

Sunday, May 07, 2006

கோல்பா... கோலிக்குண்டா...



ஓரிரு நாட்களுக்கு முன்னால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் சுவாரசியம் குறைஞ்சதால வேற எதாவது பார்க்கலாமேனு வேற அலைவரிசைக்கு ஒன்றொன்றாக தாவிக்கொண்டிருந்தேன். ஒரு ஜெர்மன் அலைவரிசையில் கோல்ப்(Golf) ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. விளையாட்டின் விதிமுறைகள் கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் சரி என்னதான் பண்றாங்கனு பாக்கலாமேனு பார்க்க ஆரம்பிச்சேன்.

விளையாட்டு என்னவோ விலை உயர்ந்த விளையாட்டுதான் ஆனா அதன் ஆதி என்னவோ நம்ம ஊருல பசங்க விளயாடுற கோலிக்குண்டுதான் அடிப்படைனு தோனுது... வித்யாசம் என்னனா... பசங்க கோலிக்குண்ட அடிக்கிறது கைவிரலால்... ஆனா கோல்ப்ல பந்த அடிக்கிறது இரும்பு குச்சியால... என்ன கோல்ப் பந்து கோலிக்குண்டை விட கொஞ்சம் அளவு பெரிசா இருக்கு அவ்வளவுதான்... ஆனா கோலிக்குண்டுல மட்டா-னு பெரிய குண்டும் இருக்கு...


கோல்ப்ல பக்கத்தில் இருக்குற குழிக்குள்ல அந்த பந்த அடிக்கிறது, கிட்டத்தட்ட நாம "சிட்டு முட்டு" விளையாடுற மாதிரியே இருக்கு... தூரத்துல இருக்குற குழிக்குள்ல பந்த அடிக்கிறது நம்ம "கட்டு குண்டு" மாதிரி இருக்குங்க அவ்வளவுதான்... பெரிய வித்யாசம் என்னன்னா... பணக்கார பசங்க விளையாடுற விளையாட்டு கோல்ப்... ஏழப்பசங்க விளையாடுற விளையாட்டு குண்டு... என்ன பணக்கார பசங்க எதயுமே கையால தொடமாட்டங்க (சாப்பாட கூடத்தான்)... அதான் கோல்ப் பந்தகூட குச்சிய வச்சு அடிக்கிறாங்க... அவ்வளவுதான்!!!

கிட்டதட்ட 15 வருசம் முன்னாடி விளையாடின ஞாபகம்... இப்ப ஊரு பக்கம் வந்தாலும் ஆசையாத்தான் இருக்கு... ஆனா என்னடா சின்னப்பய மாதிரி குண்டு விளையடுறனு கேலி பண்றதால விளையாடுறதில்ல...

ஆனா நாங்க விளையாண்ட காலம் இன்னும் நினைவில பசுமயா இருக்குங்க... ஏதேதோ விளையாடுவோம்... கட்டுகுண்டு, பூந்தான், இன்னும் சிலது மறந்து போச்சுங்க... காலம் ஓடுது... என்ன நம்ம ஊருல இருக்க விசயங்கள கொஞ்சம் மாத்தி ஏதாவது புது பேரு குடுத்துடறாங்க... நம்ம விளையாட்டுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது சந்தோசமா இருக்கு...

என்ன குண்டு விளையாட ஆசையா இருக்கா....???

அன்புடன்,
மனசு...

Saturday, May 06, 2006

தங்கமே தங்கம்....




இன்றைய சூழ்நிலையில் யார் அதிகமாக மக்களுக்கு நன்மையை செய்யப் போகிறோம் என்ற நினைப்பு இருக்கிறதோ இல்லையோ.., எப்படி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிப்போம் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் நிறையவே இருக்கிறது... அரையனாவிலிருந்து ஆயிரக்கணக்கில் தேர்தல் நேரத்தில் மட்டும் செலவழிக்கிறார்கள் அரசியல்வாதிகள்(ஏனோ தேர்தலுக்கு முன் இந்த எண்ணம் அரசியல்வாதிகளுக்கு வருவதில்லை)... இந்தத் தேர்தலில் இன்னும் ஒரு சிறப்பு முதலமைச்சரே மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அரைபவுன் தங்கம்(!) தருவதாக அறிவித்ததே. அதைப்பற்றிய சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சர சர வென்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு வானத்தில் ஏறி சூரியனைத் தொட்டதே இப்போதய ஹாட் டாக்...

இந்த நிலையில் சாதாரண மக்கள் தங்கள் பெண்களுக்கு இனி எத்தனை பவுண் தங்கம் போட்டு கல்யாணம் செய்து வைக்க போகிறார்கள்? இன்றைய செய்தி நிலவரப்படி ஒரு பவுன்(8 கிராம்) தங்கத்தின் விலை 8000 யிரத்தைத் தொட்டுவிட்டது.

தங்கத்தின் விலை குறைந்தாலும் அதை விடமாட்டேன் என்றே நாம் அதன் பின்னே ஓடித்திரிந்து கொண்டிருக்கிறோம்... இது நிஜமான அறிவீனம். அதற்குப்பதில் தங்கம் வாங்கும் பணத்தை நல்ல லாபம் தரும் தொழிலில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். தங்கமே லாபம் தரும் தொழில் என்பது இன்னொரு புறம் இருக்க, சாதாரண நடுத்தட்டு மக்கள் படும் பாடுதான் ரெம்பவும் உறுத்தலாய் இருக்கிறது...

இந்தக்காலத்து இளைஞர்களும் இன்னும் திருந்தியவாறு தெரியவில்லை. இன்னும் பெண்வீட்டார் போட்டனுப்பும் தங்கத்திலும், கொடுத்துவிடும் பணத்திலும் தான் தன் பெண்டாட்டியை காப்பாற்ற நினைக்கிறார்கள்... இந்த நிலை மாறினால், அல்லது வரதட்சணை கொடுப்பவர்க்கும் வாங்குபவர்க்கும் தண்டனை என்பது சட்டமாக்கப்பட்டால் ஓரளவு நாடு முன்னேரும்.

சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை கூட்டப்பட்டதினாலேயே இங்கும் தங்கம் விலை அதிகமாக்கப்பட்டது என்பது வியாபாரிகளின் கூற்று. இந்த நிலை மாற மக்கள் ஒரு முடிவு எடுக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை இந்தியாவிலேயே, அதிகமாக தங்கம் புளங்கும் இடம் தென் இந்தியாதான் (உலகத்திலேயே என்று கூட சொல்லலாம். புள்ளிவிபரப்படி உலகில் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதும் ஆபரங்களுக்காக அதிக அளவில் உபயோகிப்பதும் இந்தியர்களே (815 metric tons in 1998)!!!. பார்க்க http://www.gold.org/value/news/article/2650/)

தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில்தான் மக்கள் தங்கம் தங்கம் என்று அலைவதை அதிகமாக காணமுடிகிறது. பார்பதற்கு அழகாக இருக்கிறது என்பதுதான் தங்கநகை அணிவதற்கான காரணம் ஒருபக்கம் இருக்க, யார் அதிக நகை வைத்திருக்கிறார்களோ அவர்களே மனிதர்கள்(!) என்ற தரக்குறைவான எண்ணம் நம் மக்களிடையே இல்லை என்பதை யாரும் இல்லை என்று கூற முடியாது.

இந்த நிலை நீடித்தால் தங்கமும் வைரத்தைப் போல எளியவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். இனி மக்கள் தங்கம் வாங்கப்போவதில்லை என்ற முடிவெடுதால் கண்டிப்பாக இந்த நிலை மாறும். என்ன விலை சொன்னாலும் வாங்குவேன் அழகே என்ற மனிதர்கள் இருக்கும் வரை தங்கவிலை வானத்தில் ஏறி நிலாவுக்கே போய்விடும்!!!

மக்கள் சிந்திப்பார்களா???(!!!)


இல்லை நகைக்கடை வாசலில் சிரிக்கும் பொம்மையைப் பார்த்து அங்கேயே தவம் கிடப்பார்களா...?

பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்!!!

அன்புடன்,

மனசு...